நம்பிக்கை வாக்கெடுப்பு 2017

நடந்ததும் நடந்திருக்கக் கூடாததும்!

 நேற்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய நேரத்தில், ஒரு பெரிய துயரம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அது அனைத்துக்கும்  தி.மு.க. மட்டுமே காரணம் என்பதுபோலச் சில ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. அது குறித்த விரிவான நம் பார்வையை இங்கு பதிவிட வேண்டியுள்ளது.

தொடக்கத்திலேயே ஒன்றை ஒளிவு  மறைவின்றிக் குறிப்பிட்டு விடுகின்றேன்.  நேற்று சட்டமன்றத்தில் தி.மு.கஉறுப்பினர்கள் சிலர் நடந்துகொண்ட விதம்விரும்பத்தக்கதாக இல்லை. அவைத்தலைவரிடம் நடந்துகொண்ட முறையும், அவர் இருக்கையில் உறுப்பினர்கள் இருவர் அமர்ந்ததும் நம் கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதில்லை.   நாட்டு மக்களிடையேதி.மு.க. அண்மைக்காலமாகப் பெற்றுவந்த மிகப்பெரும்  நற்பெயருக்கு ஊறு  விளைவிப்பதாகவே அவை அமைந்து விட்டன. குறிப்பாக, செயல்தலைவர் தளபதி அவர்களின் மிக நாகரிகமான நடவடிக்கைகளும்,கண்ணியமான அறிக்கைகளும் அவருடைய புகழையும்,அதன் வழிக் கழகத்தின் பெயரையும் பேரளவில் உயர்த்தின. அதனைத் தொடர்ந்து கட்டிக் காத்துக்காப்பாற்றி, வளர்த்தெடுத்திட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. 

அவைத்  துணைத் தலைவர் இருக்கையில் ஒருமுறை சசிகலா அமர்த்தப்படவில்லையா என்றும்,அ.தி.மு.க.வினர் இதுபோன்ற கலவரச் செயல்களில் பலமுறை ஈடுபட்டதில்லையா என்றும் நண்பர்கள் கேட்கின்றனர்.  கண்டிப்பாக அவை உண்மைதான். எனினும், ஒரு தவறு இன்னொரு தவற்றை ஒருநாளும் நியாயப்படுத்தாது. அடுத்து, அவர்களின் தரத்திற்கு நாம் என்றும் இறங்கிப் போய்விடவும் கூடாது.

இக்கருத்துதான் தளபதிக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அதனால்தான் உடனடியாக அவைத்தலைவர் அறைக்குச் சென்று  வருத்தம்தெரிவித்துள்ளார்.  "தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் நடந்திருந்தால்,அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, அதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னிப்புக் கேட்பதாக" தளபதி அவைத்தலைவரிடம் கூறியது, முரசொலி (19.02.2017 -பக்.12) நாளேட்டில் இடம்பெற்றுள்ளது.  இது அவருடையபெருந்தன்மையையும், நாகரிகத்தையும் காட்டுகின்றது.

ஆனால் இது குறித்து மட்டுமே பெரிதாகப் பேசும் சில ஊடகங்கள், மற்ற செய்திகள் குறித்து வாய் திறக்காமல் இருப்பது என்ன நியாயம்? நேற்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் விரிவாகப் பார்த்தால்தான் உண்மை விளங்கும்!

(1)  சட்டமன்றம் தொடங்கிய பிறகுதான் சிக்கல்கள் தொடங்கின என்று கருதுவது உண்மையன்று. அதற்கு  முன்பே ஆளும் கட்சி தேவையற்ற செயல்களைத் தொடங்கி விட்டது. சட்டமன்றம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரையும்,  போர் நினைவுச் சின்னம் அருகிலேயே நிறுத்தி அனைத்து மகிழுந்துகளையும்  சோதனையிட்டுள்ளனர். அது மட்டுமின்றி, அங்கிருந்தே நடந்துதான் போக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை அனைவரும் கண்டிக்க வேண்டாமா? 

ஒருவேளை, பாதுகாப்புக்  காரணம் கருதிஅவ்வாறு செய்யப்பட்டது என்றால், அந்த விதி அனைவருக்கும் பொருந்த வேண்டாமா? ஆளும் கட்சியினரின் ஊர்திகள்  மட்டும் உள்ளேஅனுமதிக்கப் பட்டனவே, அது எப்படி? அதுவும் அந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்,தொடக்கப்பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துக் கொண்டு போவதைப் போலல்லவா அழைத்து  வரப்பட்டனர். இப்படி ஆளுக்கு ஒரு விதி என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? 

(2)  மூடிய அவைக்குள் வாக்கெடுப்புக்கான கூட்டம் தொடங்கியது. ஊடகவியலாளர்கள்,பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை. அப்படியானால், உடனடியாகக் காணொளிப் படங்களைத் தொலைக்காட்சிக்காக யார் எடுத்தார்கள்? ஜெயா தொலைக்காட்சிதான்! அவர்களுக்கு மட்டும் எப்படிச் சிறப்பு அனுமதி? அவர்கள் எடுத்துத் தொகுத்த படம்தான் edited version) அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஓடியது. ஓரிரு தொலைக்காட்சிகள் தவிர ஏனையோர், "நன்றி - ஜெயா தொலைகாட்சி" என்று கூடப் போடவில்லை.  அவர்களிடமிருந்து வந்த படம் என்பதை வெளிட்டால்தானே, அது ஒருபக்கச் சார்புடையது என்பது மக்களுக்கு விளங்கும்!  

(3)  ரகசிய வாக்கெடுப்பு கோருவது எதிர்க்கட்சிகளின் உரிமை. இதுவரையில் அப்படி ரகசிய வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்பது சரியே. ஆனாலும், அசாதாரண நிலையில் அதற்கு அவைத்தலைவர் அனுமதி அளிக்கலாம். அந்த உரிமை அவருக்கு உள்ளது. அதனைத்தான் எதிர்க்கட்சியினர் கோரினர். அதனை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சியினர் எல்லோரையும்  வெளியேற்றிவிட்டு,வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயகம் அன்று. ஆளும்  கட்சியினர் மட்டும் வாக்களிப்பதற்குச் சட்டமன்றம் எதற்கு? கூவத்தூர் விடுதியே  போது மல்லவா?

(4)  தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தான் தி.மு.க. அப்படி நடந்து கொண்டது என்று அவைத்தலைவர் தனபால் சொல்வது முற்றிலும் உண்மைக்கு மாறான ஒன்று. சமூக நீதிக் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும் கட்சி தி.மு.க. என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  மேலும் இந்தக் குற்றச்ச்சாற்றை அவைத்தலைவர் இரண்டாவது முறையாகக் கூறுகின்றார் என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.  

அ.தி.மு.க.வின் சார்பில் அவர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில், அவர் கட்சிக்காரர்கள்  மீதே அவர் முதல் முறை அந்தக்குற்றச்ச்சாற்றை முன்வைத்தார். ."இவர் எங்களைக்  கவனிப்பதே இல்லை. வேலை செய்யும் எங்களுக்கு உணவு கூடக் கொடுப்பதில்லை" என்று ஜெயலலிதாவிடம் அன்று அ.தி.மு.க.வினர் குறை கூறினர். உடனே அவர் தனபால் அவர்களை அழைத்து விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன விடை, "அம்மா, நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால், என் வீட்டில் உணவு உண்ண இவர்கள் தயங்குகின்றனர். என்னைத் தாழ்வாகப் பார்க்கின்றனர்" என்பதுதான். எனவே சாதியை ஓர் ஆயுதமாக இவர் பயன்படுத்துவதுதெரிகிறது.

அருந்ததியர் சமூக மக்களுக்கு, சில எதிர்ப்புகளையும் மீறி, உள் ஒதுக்கீடு கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான். அத்தகைய கட்சியை  இவர் குறை சொல்வதை அரசியல் பார்வை உடையவர்கள் நம்ப மாட்டார்கள். 

(5)  தங்கள் உறுப்பினர்கள் சிலரின் செயல்களுக்காகத் தளபதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இப்போது வரையில்,தி.மு.க. உறுப்பினர்களிடம், சட்டமன்றத்தில் சட்டத்திற்குப் புறம்பாகவும், வன்முறையாகவும் நடந்து கொண்டதற்கு ஆளும் கட்சியிடமிருந்து ஒரு வருத்தமும் வெளிப்படவில்லை.  

Popular posts from this blog

மஹாபாரதம் கதை - சுருக்கம்

அளவீட்டு தமிழ் அலகுகள் (Tamil units of measurement )

மகாபாரதம் பகுதி-20